ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஏற்படும் பிரளயத்தின்போது உலகம் அழிந்து மீண்டும் தோன்றும். அப்போது பிரம்மாவை உயிர்ப்பித்து அவருக்கு மீண்டும் படைப்புத் தொழிலை கொடுத்த தலமாதலால் இத்தலத்து மூலவர் 'பிரம்மபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'பிரம்மபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'மலர்குழல் மின்னம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, தமது மனைவியுடன் சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், சங்கு சக்கரத்துடன் பெருமாள் முதலானோர் தரிசனம் தருகின்றனர். இக்கோயிலில் வில்லேந்திய கோலத்துடன், காலில் பாதக் குறடுகள் அணிந்து, வள்ளி, தேய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகப் பெருமான் உற்சவ மூர்த்தி சிறப்பு.
திருக்கடவூரில் மார்க்கண்டேயர் தமது சிவபூஜைக்காக காசியில் இருந்து கங்கைத் தீர்த்தத்தைக் கொண்டு வந்து பூஜை செய்தார். அவருக்காக சிவபெருமான் அருகில் உள்ள கடவூர் மயானம் கோயிலில் உள்ள கிணற்றில் கங்கையைப் பொங்கச் செய்தார். அதைக் கொண்டு மார்க்கண்டேயர் சிவபூஜை செய்தார். இன்றும் அந்த கிணற்றில் இருந்துதான் திருக்கடவூர் சுவாமி அபிஷேகத்திற்கு தீர்த்தம் கொண்டு செல்கின்றனர். பங்குனி மாதம் சுக்லபட்ச அஸ்வினி நட்சத்திரத்தன்று இக்கிணற்று நீரில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.
நான்கு மயானங்களுள் கடவூர் மயானமும் ஒன்று. மற்றவை கச்சி மயானம், காழி மயானம், நாலூர் மயானம். மெய்ஞ்ஞானம் என்றும் வழங்குவர்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|